கோவில் கோபுர கலசமும் இரிடிய மோசடியும் ¦ Temple kalasam, iridium
கோவில் கோபுர கலசமும் இரிடிய மோசடியும்
அறிவியலும் ஆன்மீகமும் புணர்ந்த
கோவில் கோபுர உச்சியில் பல
கதைகளுடன் அரும்பாய் கால்
பதித்த கவசம்- கலசம்
இதைக்கொண்டு நடத்தப்படும் வேசம்
கோபுர கலசம்
கோவில் கோபுரத்தின் உச்சியில் வேத மந்திரங்கள் ஓத பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கலசத்தில் உள்ள தானியங்கள் மாற்றி குடமுழுக்கு நடத்தப்படும். இந்நிகழ்வு கற்பகிரகத்தின் ஆற்றலை (சக்தியை) பெருக்க நடத்தப்படக் கூடிய அறிவியல் கலந்த ஆன்மீகமாக கருதப்படுகிறது.
"கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்"
அக்காலத்தில் கோவில்களை சுற்றியே வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நேர்மறை ஆற்றல் கொண்டதாக விளங்கும் கோவில்கள் அதன் உச்சியில் உள்ள கலசங்கள் நேர்மறை ஆற்றலை பூஜ்ஜிக்கப்படும் கற்பகிரத்தில் உள்ள சாமி சிலைகளில் இருந்து பெற்று சுற்றியுள்ள மக்களுக்கு நன்மை அளிப்பதாக நம்பப்படுகிறது.
கலசங்கள் ஒரு மின்கடத்தியாக செயல்பட்டு சுற்றியுள்ள இடங்களை இடிமின்னலில் இருந்து காக்கும் வல்லமை கொண்டதாக கூறப்பட்டாலும் இதற்கான ஆதாரப்பூர்வ ஆய்வுகள் இல்லை அதுமட்டுமின்றி சில இடங்களில் இடிமின்னலினால் கலச கோபுரங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. ஐம்பொன்னால் செய்யப்படும் இன்றைய கலசங்கள் அந்நாளில் கல்லினாலும் வடிக்கப்பட்டது. இதனால் இவை மின்கடத்தியாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கூற்று தவறாகவே உள்ளது.
மின்னல்கள் தொடர்ந்து தாக்குவதால் இரிடியமாக மாறிவிடும் என்ற வதந்தியும் உலவுகிறது.
தானியங்களை பெரு இயற்கைச் சீற்றங்களில் இருந்து காக்கவே இது போன்ற முறை கடைபிடித்திருக்கக்கூடும். கலசத்தில் நெல், கேழ்வரகு, சோளம், வரகு, திணை, மக்காச்சோளம், எள் மற்றும் உப்பு போன்றவற்றை வைத்து பின் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தி புதிதாக மாற்றி வைக்கப்படுகிறது. இதில் வரகு தானியங்கள் மட்டுமே மின்னலை தாங்கும் தன்மை கொண்டது.
கலசம் திருடும் கும்பல்
2008 ஆம் ஆண்டு ஜெர்மன் ஆய்வுக்குழு தனது செயற்கைக்கோல் வாயிலாக கேரளாவின் ஆலம்புழா மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலின் கோபுரத்தில் உள்ள மூன்று கலசங்களிலும் இரிடியம் என்ற தனிமம் இருப்பதை கண்டுபிடித்தது.
கலசத்தை பெற கோவில் நிர்வாகிகளிடம் 10 லட்சம் முதல் 1 கோடி வரை பேரம் பேசப்பட்டது. இருப்பினும் கோவில் நிர்வாகம் உடன்பட மறுத்தது அதுமட்டுமின்றி கோவிலைச் சுற்றியும் பலத்த பாதுகாப்பு வழங்கியது. பாதுகாப்புக்கிடையிலும் 9 கிலோ எடை கொண்ட அக்கலசங்கள் திருடப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளானது.
ஒரு கிலோ இரிடியம் கள்ளச்சந்தையில் 50 லட்சத்திற்கு விலை போவது தெரிந்து இப்போது வரை இதன் தாக்கத்தால் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கலசங்கள் திருடப்பட்டு வருகிறது. இவற்றிற்கு மாற்றாக தாங்களாகவே கலசங்கள் செய்து அவற்றை சக்தி வாய்ந்ததாக நம்பவைத்து ஏமாற்று வேலைகளும் சமீபக காலங்களாக நடந்து வருகிறது.
சதுரங்க வேட்டை படம் இதற்குத் தெளிவான எடுத்துக்காட்டு குறிப்பாக பணக்காரர்களை ஆன்மீகம் கலந்த அறிவியலில் நம்ப வைத்து பணம் பார்க்கும் இவர்கள் செய்யும் வித்தைகளில் ஒன்றுதான் "Rice-Pulling".
சோதனை முறை: Rice-Pulling என்பது ஒன்றுமல்ல அரிசி தானாகவே கலசத்தின் ஆற்றலால் ஈர்க்கப்படும் என்று ஏமாற்றப்படும் முறையாகும்.
இரும்புத் துகள் கலந்த அரிசியை காந்தம் பொருத்தப்பட்ட கலசம் இழுப்பது அறிவியலேயன்றி ஆன்மீகம் அல்ல.
இதனை நம்பி கோடீஸ்வரன் ஆகும் கனவில் ஏன் ஏமாறுகிறார்கள் என்று பார்ப்போம்.
அரியவகை இரிடியம் (Iridium-Ir)
இரிடியம் என்னும் தனிமம் 77 என்ற அணு எண்ணைக் கொண்ட பிளாட்டினம் தொகுதியைச் சார்ந்த இடைநிலைத் தனிமம். கடினமானதும், நொறுங்கக்கூடிய தன்மையும் கொண்ட இரிடியம் வெள்ளி போல வெண்மையானது.
ஆஸ்மியம் தனிமத்தை அடுத்த 2 வது அடர்த்தி மிகுந்த இரிடியம் 1803 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சார்ந்த ஸ்மித்சன் டென்னன்ட் என்பவரால் இயற்கையாக தோன்றும் பிளாட்டினத்துடன் காணப்படும் கரையாத மாசுக்களில் இருந்து இரிடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
இவை அமிலத்தில் கரையும் போது பலவண்ணங்களில் தோன்றும் அதனால் கிரேக்க வானவில் கடவுளான ஐரிஸ் பெயரால் இரிடியம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் அரிதான தனிமங்களில் ஒன்று. இதன் ஆண்டு உற்பத்தி மற்றும் நுகர்வு வெரும் 3 டன் மட்டுமே ஆகும். பிளாட்டினம் 1000 த்தில் 1 பங்கு தான் இரிடியம்.
பிளாட்டினம் மற்றும் ஆஸ்மியம் கலவையாக கிடைக்கும் இரிடியம் விண்கற்களில் அதிக அளவு உள்ளதாகவும் இதன் காரணத்தால் கிரீத்தேசிய-பலியோசீன் காலப்பகுதியின் நிலவியல் எல்லையில் காணப்பட்ட களிமண் அடுக்கில் அசாதாரணமான அதிக அளவு இரிடியம் காணப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலின் உள்ளகத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் காணப்படும் இரிடியத்தின் அளவுகள் முறன்பாடுகள் எல்டானின் விண்கல் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருக்கலாம் என கருதுகின்றனர்.
பத்தாவது அதிக கொதிநிலை கொண்ட இரிடியம் 0.14 கெல்வினுக்கு கீழே மீக்கடத்தியாக மாறும் தன்மை கொண்டது. X-கதிர் படிகவியல் ஆய்வில் இரிடியத்தின் அடர்த்தி 22.56 gram/cm^3 என்றும் ஆஸ்மியத்தின் அடர்த்தி 22.59 gram/cm^3 எனவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அறை வெப்பநிலை மற்றும் நிலையான வளிமண்டல அழுத்தத்தில் இரிடியம் ஆஸ்மியத்தை விட 0.04 gram/cm^3 அதிகரித்து 22.65 gram/cm^3 ஆக அடர்த்தி அதிகரிக்கிறது. இதன் உருகுநிலை 2466 •c அதாவது 4471 •F ஆகும்.
ஒரு சில எரிமலைக் குழம்புகளில் இருந்தும் பிரித்தெடுக்கப்படும் இரிடியத்திற்கு இந்தியாவில் இதற்கான உற்பத்தி கிடையாது.
1 கிராம் இரிடியம் மூன்றாயிரம் முதல் ஏழாயிரம் வரை விலைபோகிறது. இரிடியம் பல நூறு ஆண்டுகள் பழமையான தாமிரத்தில் கலந்துள்ளது என்பதால் பழமையான தாமிர நாணயங்கள் தகடுகள் மற்றும் கலசங்களுக்கு இன்றளவும் அதிக விலை பேசப்படும் பொருளாகவுள்ளது. பழமையான தாமிர நாணயங்களைக் கொண்டு 361 •F வெப்பநிலையில் தாமிரமும் 2645 •F வெப்பநிலையில் நிக்கலையும் பிரித்தால் மீதமுள்ள தனிமமான இரிடியம் கிடைக்கும்.
1Kg இரிடியம் சர்வதேச சந்தையில் 6.25 லட்சம் என்றாலும் கள்ளச்சந்தையில் 50 லட்சத்திற்கு விலைபோகிறது.
பயன்பாடுகள்
தொடக்கத்தில் பேனா முனைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மருத்துவ உபகரணங்களிலும் எலக்ட்ரானிக் இயந்திர பாகங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
அதிக வெப்பம் தாங்கக்கூடிய மற்றும் அரிமானத்தைத் தடுக்கும் என்பதால் ஏவுகனைகளில் மேற்பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.
ஸ்பார்க் பிளக்குகளில் மற்றும் கனரக மின் தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
இவை மட்டுமின்றி தங்கத்தின் எடையில் 0.25 சதவிகிதம் இரிடியம் கலப்பதன் மூலம் 100 காரட் தங்கமாக மாற்றி தங்கத்திலும் மோசடி செய்யப்படுகிறது.
இவற்றின் சிறப்புகளைக் கொண்டு மோசடி செய்யும் கும்பல் கோவில் கலசத்தில் கைவரிசை காட்டி வருகின்றனர். இதை வீட்டில் வைத்திருப்பதால் செல்வம் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டும் என்பது கற்பனை கலந்த மூடநம்பிக்கையே. ஆகையால் பழமையான சின்னங்களான கோவில் பொருட்களை கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும்.

Comments
Post a Comment