அறச்சலூரின் பெருமை பேசும் இசைக் கல்வெட்டு ¦ Arachalur ¦ Music Inscription


அறச்சலூர் இசைக் கல்வெட்டு

தொண்மையும் நிகரில்லா பெருமையும்
தன்னகத்தே கொண்டு இன்றளவும் 
முதிர்ச்சியடையா இளமையுடன் பல
தலைமுறை தொட்டு வாழும் தமிழுக்கு
இசை விருந்து படைத்து வளர்த்த 
அறம் சார்ந்த ஊர் அறச்சலூர்.

அறச்சலூர்

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து காங்கேயம் செல்லும் பிரதான சாலையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பசுமை மாறா இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் அறச்சலூர். இவ்வூரில் குடிகொண்டுள்ள அறச்சாலை அம்மன் பெயரில் அறச்சாலையூர் (அறம்+ சாலை+ ஊர்) என்று அழைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் அறச்சாலையூர் மறுவி அறச்சலூர் என்று பெயர் மாற்றியழைக்கப்பட்டது. தற்போது அதுவே பிழையாக அரச்சலூர் ஆனது.
 
சமணர் படுகை

    அறச்சலூரில் உள்ள நாகமலை என்னும்  மலைத்தொடரின் உச்சியில் முருகனுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலைத்தொடரின் வடக்குச் சரிவில் கீழ்புறமாக சுமார் ஒன்றறை கிலோ மீட்டர் தொலைவில் ஆண்டிப்பாறை பகுதியில் பாண்டியர் குழி என்னும் சரிவில் சுமாராக 150 அடி உயரத்தில் இயற்கையாய் அமையப்பெற்ற குகையில் இசைக்கல்வெட்டு பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்று சமணர் படுகைகளைக் கொண்டு 1800 ஆண்டு கால பழமையை தாங்கி நிற்கிறது. பாறையில் செதுக்கப்பட்ட உணவுத்தட்டும் குவளையும் இருந்துள்ளன. 
 
    அரச்சலூரில் இருந்து 20 மைல் தொலைவில் பெருந்துறை விஜயமங்களத்தில் சமண மதத் தீர்த்தங்கரர் வழிபாட்டுத்தலம் இருந்தமைக்கான சான்றுள்ளது இதனைக் கொண்டு இங்கு சமணத் துறவிகள் தங்கியிருக்கக் கூடும் என வியூகிக்க முடிகிறது.
 
 
இசைக் கல்வெட்டு

    குகைத்தளத்தில் கற்படுகைகளுக்கு அருகில் இசை, தாள எழுத்துக்கள் பொரிக்கப்பட்டுள்ளது. இதனை 1960-ஆம் ஆண்டு ஈரோட்டைச் சார்ந்த புலவர் எஸ்.இராசு என்பர் இசைக் கல்வெட்டை கண்டுபிடித்து இவ்வெழுத்துக்களை சுதேசிமித்திரன் செந்தமிழ்ச் செல்வி பத்திரிக்கையில் வெளியிட்டார். இக்கல்வெட்டு கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் அதில் பொரிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களை கொண்டு கணிக்கின்றனர். இந்தக் கல்வெட்டே தமிழி எழுத்தில் கிடைத்த முதல் இசைக் கல்வெட்டு என்ற பெருமையை கொண்டது.

    கற்படுக்கைகளுக்கு அருகில் மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அதில் இரண்டு அடவு எனப்படும் இசை, தாள எழுத்துக்களைக் கொண்ட ஐந்து ஐந்து வரிசைகளாக பொரிக்கப்பட்டுள்ளது. முதல் தொகுதியில் உள்ள பிராமி எழுத்துக்கள் சற்று சிதைந்த நிலையிலும் (அடையாளம் காணக்கூடிய அளவிலும்) இரண்டாவது தொகுதியில் உள்ள எழுத்துக்கள் பாதி சிதைந்த நிலையிலும் (முதல் இரு வரிசைகள் தவிர மற்ற மூன்று வரிசை முழுவதும் சிதைந்தும்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முதல் தொகுதியில் 

    த          தை           தா     தை            த
தை              தா     தே             தா     தை
    தா         தே      தை          தே            தா
தை             தா      தே            தா      தை 
    த         தை           தா     தை             த

இரண்டாம் தொகுதி

தை            த          தை          த         தை
    த        தை              த      தை             த
தை            த          தை          த         தை
    த        தை              த      தை             த
தை            த         தை           த         தை

    இந்த வரிசையில் இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோ அதுமட்டுமின்றி மேலிருந்து கீழாகவோ அல்லது கீழிருந்து மேலாகவோ சென்றாலும் ஒரே வடிவமைப்பும் மற்றும் ஒரே எழுத்தையும் கொண்டு இருப்பது இதன் தனிச்சிறப்பு. இசை எழுத்துக்கள் பற்றி அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் பாலை என்னும் படவடிவ இசைக்குறியீடு உள்ளதாகவும் இவற்றில்
            1. வட்டப் பாலை,     
        2. சதுரப் பாலை என இரு வடிவம் உள்ளதாக குறிப்பிடுகிறார். இதனைக் கொண்டு இது சதுரப் பாலையை ஒத்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்விரு கல்வெட்டுக்கு இடையில் உள்ள மற்றொரு கல்வெட்டைக் கொண்டு இதனை பொரித்தவரின் விவரம் தெரியவருகிறது.

    சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் கூறும் "எழுத்துப் புணர்ப்பு" என்ற தொடர் எழுதப்பட்டுள்ளது. இரு வரிகளை கொண்ட இந்த கல்வெட்டை வாசித்த ஐராவதம் மகாதேவன்,
"எழுதும் புணருத்தான் மசிய் 
வண்ணக்கண் தேவன் நூத்தன்"
    மசி/மலை ஊரைச்சார்ந்த காசு பரிசோதகரான தேவன் யாத்தன் இசைக் கல்வெட்டை தொகுத்தளித்தார் என்று பொருள் படுவதாக கூறியுள்ளார்.
 
துறைசுந்தரம் இதனை 
"எழுதும் புணருத்தான் மணிய்
வண்ணக்கன் தேவன் சாத்தன்"
    மணி வண்ணக்கனான தேவன் சாத்தன் தொகுத்தான் என்று குறிப்பிடுகிறார்.
 
    வண்ணக்கன் என்பது புறநானூற்றுக்கு உரை எழுதிய ஔவை. சு. துறைசாமிப்பிள்ளை குறிப்பிடும் பொன்னின் தரத்தை அல்லது பொற்காசின் தரத்தை பரிசோதிக்கும் பரிசோதகர் என பொருள்படும்.

    இவற்றின் மூலம் எழுத்துப் புணர்ந்து கொடுத்தவன் 
1) மணி வண்ணக்கன் தேவன் சாத்தன்- மணிகளை பரிசோதிக்கும் தேவன் சாத்தன் (கொடுமணலில் கிடைத்த மணிகளை கொண்டு இங்குள்ள தொழில் கூடத்தில் மணிகளை பரிசோதிக்கும் தொழில் செய்பவன் என கருதப்படுகிறது)
2) மலை/ மசி வண்ணக்கண் தேவன் சாத்தன்- மலைகளில் வாழும் வண்ணக்கண் தேவன் சாத்தன் என இரு வேறு பொருள்படுகிறது.

    இரு மாந்தர்கள் நடனமாடுவதைப் போற்ற மற்றொரு கல்வெட்டும் உள்ளது. இது எதை உணர்த்துவதாகவும் குறிப்பிடப்படவில்லை இருப்பினும் இசைக் கல்வெட்டுக்கு அருகில் இருப்பதால் இதனை நடன மாந்தர்களாகவே பொருள் கொள்வோம்.

சிதைந்த / சிதைக்கப்பட்ட புதையல்

    இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட இக்குகை இப்போது மது, மாதுக்கள் ஒதுங்கிச் செல்லும் அவல நிலையில் தனித்து விடப்பட்ட இடமாக மாறிவிட்டது.


    சான்றோர்கள் வாழ்ந்து நமக்கு இன்றளவும் தன்னை உலகம் திரும்பிப் பார்க்கச் செய்த தமிழனுக்கு இன்றைய மூடர்கள் செய்யும் கல்வெட்டுக்கள் ஆங்காங்கே சமர்ப்பணம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

Kandha Sasti kavasam lyrics | கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

கீழடிக்கு ஓர் இணையடி எம் கொடுமணல் ¦ Kodumanal