கீழடிக்கு ஓர் இணையடி எம் கொடுமணல் ¦ Kodumanal
பழமையும் பெருமையும் கரைபுரண்டோடும் செழுமையும் பல்கிப் பெருகிய தமிழகத்தினில் புகழுக்கு ஓர் மணிமகுடமாய் நொய்யல் ஆற்றின் வடகரையில் மண்ணில் புதையுண்ட பண்டைய தமிழனின் வாழ்க்கைப் புதையல் - "கொடுமணல்"
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் உள்ள கொடுமணல் கிராமம், இது நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த தொழில் நகரம். சங்க காலம் என வழங்கப்படும் காலகட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும். கொடுமணல் சங்க நூலில் (பதிற்றுப்பத்து) "கொடுமணம்" என்று அழைக்கப்பட்டுள்ளது.
சான்று-1:
(சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்தில் புலவர் அரிசில் கிழார் என்பவரால் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையை புகழ்ந்து பாடிய பாடல்)
விளக்கம்
வேதங்களைச் சொல்லக் கேட்டு அதற்கான விரதங்களை இடைவிடாது கடைபிடித்து வேள்விகளைச் செய்து முடித்த மன்னனே!
நுண்ணிய கருமணலைப் போன்ற கீழே தாழ்ந்த கரிய கூந்தலைக் கொண்ட திருமகளாகிய லட்சுமியிலும் சிறந்த உன் மனைவிக்கு கொடுமணம் என்னும் ஊரில் மிகுந்த வேலைப்பாடுகள் கொண்ட அணிகலன்களையும் பந்தல் என்ற ஊர் தந்த புகழ்பெற்ற முத்துக்களையும் கொண்டு வந்தவனே.
சான்று-2:
(பதிற்றுப்பத்தில் கபிலர் பாடிய பாடல்)
விளக்கம்
கடமை உணர்ந்து கைத்திறந்தால் இசை கூட்டிப் பாடும் பாணனே ! பந்தர் என்னும் பெயருடன் பெரும்புகழ் பெற்ற மூதூரிலிருந்து வருகிறாய். பெண் கொடுத்து வாங்கித் திருமண உறவு கொண்ட (கொடுமணம்) உன் உறவுக்காரர்களுடன் வருகிறாய். நீ செல்வக் கருங்கோ வாழியாதனிடம் சென்றால் அவன் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் தென்கடல் (குமரிக்கடல்) முத்தமொடு நல்ல அணிகலன்களும் பரிசாகப் பெறலாம்.
தொல்லியல்
சில வருடங்களுக்கு முன் கிணறு தோண்டும் பணியின் போது கிடைத்த பெரிய வடிவிலான மண்பானை கண்டுபிடிக்கப்பட்டது. இது இறந்தவர்களின் உடலை புதைக்கப் பயன்படுத்தப்பட்ட "முதுமக்கள் தாளி". இதனை அடுத்து 1961-ஆம் ஆண்டு புலவர் செ.இராசு மற்றும் செல்வி முத்தையா ஆகியோரால் உலகிற்கு "நொய்யல் ஆற்று நாகரீகம்" வெளிக்கொணரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1979-ஆம் ஆண்டு தமிழக தொல்லியல்துறையும், 1985-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சுப்புராயலு தலைமையிலும், 1997-ஆம் ஆண்டு தமிழக மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகமும் இணைந்து ராஜன் தலைமையிலும் தொல்பொருள் ஆராய்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது. தற்போது 2020-ஆம் ஆண்டு மீண்டும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் முழு வேகத்துடன் மத்திய அரசின் நிதியுடன் தொடங்கியுள்ளன.
ஆய்வுகளில் 203- இரும்பு, 45- செம்பு, 6- தங்கம், 144- தந்தம் மற்றும் எழும்புத் துண்டுகள், 84- சுட்ட மண், 319- மணிகள், 300 க்கும் மேற்பட்ட பிராமி எழுத்துகளுடன் கூடிய மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது.
ஆய்வுப்பகுதி
சென்னிமலையிலிருந்து 15 கி.மீ தொலைவில் கொடுமணல் கிராமம் அமைந்துள்ளது. இதில் ஆற்றை ஒட்டிய 15 ஹெக்டேர் நிலப்பரப்பு குடியிருப்புப்/வாழ்விடப் பகுதியாகவும் (Habitational site), அதனை அடுத்து அரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள 50 ஹெக்டேர் நிலப்பரப்பு முற்கால இடுகாடு/ ஈமக்காடு (Burial site) ஆக இருந்திருக்க பல சான்றுகள் கூறுகின்றன.
பெருங்கற்கால பண்பாட்டுக்குறிய 300க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்களும், முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
முதுமக்கள் தாழி
இதுவரை கிடைத்த முதுமக்கள் தாழிகளில் "சாம்பன் சுமரன்" என்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொரிக்கப்பட்டுள்ளது. சிறு தாழிகளில் சாம்பன் என்றும் பெரிய தாழிகளில் சாம்பன் சுமரன் என்றும் எழுதப்பட்டுள்ளது. இதை வைத்து இருவரின் பெயராகவும் இதில் சுமரன் தந்தையாகவும் சாம்பன் மகனாகவும் இருந்திருக்கக்கூடும். இவர்கள் வழி வழியாக இத்தொழில் செய்து வந்திருக்கலாம் என வியூகிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
முதுமக்கள் தாழியில் ஒருவரின் எழும்புக் கூடானது அமர்ந்த நிலையில் முழுவதுமாக கிடைத்துள்ளது. இதனை ஆய்வுக்கு அணுப்பப்பட்டு பின் ஆய்வுகளின் அடிப்படையில் 2250 ஆண்டுகள் பழமையானது என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
வீடு மற்றும் கல்லறை
2018- ஆம் ஆண்டு ஜனவர் மாதம் இங்கு நடுகுழிகளோடு கூடிய சதுர வடிவிலான வீடு மற்றும் தொழிற்கூடங்கள் அமைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் இரு அறைகள் கொண்ட கல்லறை ஒன்றும் அக்குழியில் 2200 மங்கிய சிவப்புக் கற்கலால் ஆன மாலையும், மதிப்புமிக்க பொருட்கள் வைக்கும் கல்லால் ஆன பெட்டியும் கிடைத்துள்ளது இப்பெட்டிகள் கிரானைட் கற்களால் செய்யப்பட்டுள்ளவை. இவை கல்லால் ஆன மூடிகளைக் கொண்டுள்ளன மேலும் சில பெட்டிகளில் உடைந்த எழும்புத் துண்டுகளை௧் (இறுதி ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களாக கருதப்படுகிறது) கொண்டுள்ளது. நான்கு ஜாடிகள், மோதிரம் மற்றும் சிதைந்த காணீலியன் மணிகள் கிடைத்தன. இப்பெட்டிகளில் அம்புக்குறிகளும் காற்றோட்டத்திற்காக சிறு துளைகளுடன் கூடிய அமைப்புடன் உள்ளது. இதில் உள்ள அம்புக்குறிகள் எதை உணர்த்துகிறது என்பது ஆய்வாளர்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
கல்லறையானது கல்பதுகைகளை கொண்ட அமைப்பும் இதனைச் சுற்றி இரண்டு வருசைகளாக வட்டவடிவில் கற்களை வைத்தும் நடுவில் நெடுகல் எனப்படும் நினைவுத் தூணையும் கொண்டுள்ளது. இது போன்று வட்ட வடிவில் கற்களை கொண்டு அமைக்கப்பட்ட 180 கல்லறை குழிகளில் சில குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள்
சேர நாட்டைச் சார்ந்த தொழில் நகரமாக அன்று விளங்கியுள்ளது. கொடுமணலில் பல வண்ண மணிகளைக் கொண்டு அணிகலன்கள் செய்யும் தொழிற்சாலையாகவும், இரும்பு மற்றும் எஃகு ஆலைகளும் அதுமட்டுமின்றி பருத்தி ஆடைகள் தயாரிக்கும் இடமாகவும் இருந்துள்ளது.
இரும்பு எஃகு உருக்கு ஆலைகள் இருந்ததற்கான எச்சங்கள் ஆங்காங்கே கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்விடமானது தொழில் செய்ய ஏற்ற இடமாக கருதப்பட்டுள்ளது ஏனென்றால் 15 கி.மீ சுற்றளவிலேயே ஆபரண கற்கள் கிடைத்துள்ளது. சிவன்மலையில் நீலகற்கள் ( Gem stone), படியூரில் கோமேதகம் (Beryl), 2 கி.மீ தொலைவில் உள்ள வெங்கமேடு மற்றும் 5 கி.மீ தொலைவில் உள்ள அரசம்பாளையம் பகுதிகளில் பளிங்கு (Quartz) கற்களும் கிடைத்துள்ளன. இது தவிர லாபியஸ் லசுமி (Lapius lajuli) மிகத் தொலைவில் உள்ள ஆப்கானிஸ்தானிலும், கார்னீலியன்(Carnelian) மற்றும் அகேட் (Agate) இவை இரண்டும் மகாராஷ்டிராவிலும் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
கார்னீலியன்(Carnelian), அகேட் (Agate), ஜாஸ்பர் (Jasper), பெரில் (Beryl), பளிங்கு (Quartz), லாபியஸ் லசுமி (Lapius lajuli) முதலிய வண்ண மணிகள் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்களும்
இரும்பு ஈட்டிமுனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, தச்சரின் துளை ஊசி (10 செ.மீ நீளமுள்ள இரும்பினால் முறுக்கப்பட்ட மரத்தில் துளையிட தச்சர்கள் பயன்படுத்தும் துளை ஊசி), அரையடி நீல செம்பினால் ஆன புலி பொம்மைகள், மண் நூற்கதிரிகள், இரும்பாலான குதிரை சேணம் ஆகிய இரும்பு எஃகு பொருட்களும்
உருமாறிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பருத்தி பஞ்சும்
சுடுமண் முத்திரைகள்( சுமார் 2 செ.மீ அளவு கொண்ட முத்திரையில் "லவஸ" பிராமி எழுத்து பொரிக்கப்பட்டுள்ளது), வளையல்கள் தயாரிக்க சங்குக் குவியல்கள், தமிழ் பிராமி எழுத்து கொண்ட மட்பாண்டங்கள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட அரிச்சுவடிகளும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான எடுத்துக்காட்டுகளாக கிடைக்கப்பெற்றுள்ளன.
பிராமிய மட்பாண்டங்கள்
கிடைக்கப்பெற்ற மட்பாண்டங்களில் ஆதன், சாத்தன், கோன், அந்தை, மகன், அதிந்தை, குவிரன் , சுமனன் சம்பன், சந்தை வேளி, பன்னன், பாகன், விசாகி, சிலிகன், உரனன் மற்றும் திசனன் போன்ற பெயர்கள் பிராமிய எழுத்துகளாலும் இதன் இறுதியில் சூரியன், ஸ்வஸ்திகா, நட்சத்திரம், ஏணி, நந்திபாதா, மீன், சக்கரம், வில் மற்றும் அம்பு முதலிய குறியீடுகளும் வரையப்பட்டுள்ளது.
அரிச்சுவடிகளில் ஒரு சிறிய சென்னிற பானை ஓட்டின் மீது அ, ஆ, இ, ஈ என்ற தமிழ் பிராமி வரிவடிவில் எழுதப்பட்டுள்ளது. இதில் ஆ, இ என்ற எழுத்துக்களின் பிராமி வரிவடிவங்கள் முதல் முறையாக தமிழகத்தில் கிடைத்துள்ளது இதன் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் பொருட்செல்வம் மட்டுமின்றி கல்விச் செல்வத்திலும் தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பது புலப்படும்.
வணிகத் தொடர்பு
எஃகு, பாசிமணிகள் எகிப்து மற்றும் ரோமானியம்(Roman) வரை வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சான்றாக ரோமன் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கரூரை தலைநகராகக் கொண்டு சேரர்கள் ஆட்சி செய்த போது கொடுமணலை தொழில்நகரமாகவும் தம் படைக்குத் தேவையான இரும்பால் ஆன வாள், ஈட்டி போன்ற உபகரணங்கள் செய்யவும் பயன்படுத்திக் கொண்டனர்.
கொடுமணலிலிருந்து முசிறி துறைமுகத்திற்கு (இன்று கேரளாவில் பட்டணம்) அனுப்பி வைக்கப்பட்டு பின் அங்கிருந்து மேலை நாடுகளுக்கு வணிகத் தொடர்பு கொண்டுள்ளது. சேரர்களின் மிகக் பெரிய துறைமுகமாக முசிறி இருந்ததற்குச் சான்றாக கிரேக்க மாலுமிகள் முதலாம் நூற்றாண்டில் எழுதிய "The Periplus of the Erythraean Sea" நூலில் இருந்து தெளிவாகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க கொடுமணலை அகழ்வாராய்ச்சி செய்து நம் தமிழனின் பெருமையை உலகறியச் செய்த அகழ்வாராய்ச்சித் துறைக்கு நம் மனமார்ந்த நன்றிகள்!

Nice presentation
ReplyDeleteThanks 4 ur support
DeleteThat is a great piece of information. Keep up the good work. Looking forward to see more post from you.
ReplyDeleteThanks for ur encouragement
DeleteGood one
ReplyDeleteThis website is awesome.Blogging Queries
ReplyDeleteThank u so much
ReplyDelete